சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், உயர்மட்ட பாதைக்கான பணிகள் வரும் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் கூறினார்.
இதுதொடர்பாக, சென்னை மாதவரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில், மாதவரம் பால்பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை நிலையம் வரை 1.4 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். முதல் சுரங்கம் துளையிடும் பணி தொடங்கி உள்ளது. இப்பணி 5 மாதத்தில் முடியும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் மொத்தம் 23 சுரங்கம் துளையிடும் இயந்திரங்களைப் பயன்படுத்த உள்ளோம். தற்போது வரை 8 இயந்திரங்கள் வந்துள்ளன. மாதவரம் - கெல்லீஸ் வரை 7 இயந்திரங்கள் அடுத்த 2 மாதத்தில் பயன்படுத்தப்படும். இந்த வழித்தடத்தில் தற்போது ஒரு சுரங்கம் துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்தி உள்ளோம். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், உயர்மட்ட பாதையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லியில் இருந்து போரூர், ஆற்காடு சாலை வரை என பல இடங்களில் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.
உயர்மட்ட பாதைகளை அமைக்கும் பணிகளை 2025-ம் ஆண்டுக்குள் முடித்து, ஆய்வுக்கு உட்படுத்தி விடுவோம். சுரங்கப்பாதை பணியைப் பொறுத்தவரை, சுரங்கம் துளையிடும் இயந்திரம் ஒரு நாளைக்கு 10 மீட்டர் வரைதான் சுரங்கப் பாதை அமைக்கும். இப்பணிகள் மெதுவாகவே நடைபெறும். 2026-ம் ஆண்டு அல்லது 2027-ம் ஆண்டு தொடக்கம் வரை இப்பணி நடைபெறும். அதேநேரத்தில், உயர்மட்ட பாதையில் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடித்து, சில இடங்களில் மெட்ரோ ரயில் சேவையைதொடங்குவோம். வரும் 2027-ம்ஆண்டில் எல்லா வழித்தடங்களும்மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக திறக்கப்படும். அந்தவகையில், பூந்தமல்லி -போரூர் வழித்தடத்தில் பணிகள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதலில் திறக்கப்படும்.
பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிகள் 3 மாதத்தில் தொடங்கும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் பல இடங்களிலும் நடந்தாலும், பொதுமக்கள் பாதுகாப்புக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.