சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை இடையேபறக்கும் ரயில் சேவையை தமிழகமுதல்வர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி வைப்பார் என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை 5 கி.மீ. தொலைவுக்கு பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2007-ம் ஆண்டு ரூ.495 கோடியில் தொடங்கப்பட்டது. வேளச்சேரி அடுத்த புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்தது.
ரயில்பாதை, சிக்னல் கட்டமைப்புகளும் முடிவடைந்தன. ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே 500 மீட்டர் தூரத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவதில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆதம்பாக்கத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர்.
நிலம் கையகப்படுத்துதல்: பின்னர் செய்தியாளர்களிடம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது: வேளச்சேரி-பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ல்முடிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் சம்பந்தமாக நீதிமன்றங்களில் வழக்குகள், ஆட்சிமாற்றம் ஆகியவற்றால் காலதாமதமானது. புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய 2 நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இறுதியாக, ஆதம்பாக்கம் பகுதியில் பணி நடைபெறுகிறது. மார்ச் மாதம் பணிகள் நிறைவு பெறும். இதையடுத்து, வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வர் தொடங்கி வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.