திண்டுக்கல்: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள புகையிலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அஸ்வகந்தா பயிர் சாகுபடி திட்டம் துவக்க விழா நடைபெற்றது. திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். மாநில மூலிகை தாவர வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சு.கணேசன் வரவேற்றார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் பேசினர்.
அஸ்வகந்தா பயிர் சாகுபடி திட்டத்தை 200 ஏக்கர் பரப்பில் துவக்கிவைத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில் மொத்தம் 136 அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டது. இதில் சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவத்திற்கு மட்டும் 9 அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டது. இதில் 6 அறிவிப்புக்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இன்று இரண்டு அறிவிப்புக்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மூலிகைகள் மூலம் அழகு சாதனைப்பொருட்கள் தாயரிக்கும் அறிவிப்பை செயல்படுத்த பூர்வாங்க பணிகள் நடைபெற்றுவருகிறது.
மூலிகைப்பொருட்கள் வளர்ப்பில் விவசாயிகளை ஈடுபடுத்த பயிற்சி நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பில் மூலிகை பயிர் சாகுபடி செய்யப்படும் என்று மானியக் கோரிக்கையில் அறிவித்தது தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. அஸ்வகந்தா மூலிகை செடி ஆந்திரா, மகாராஷ்டிரா பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது.
தமிழகத்தில் பயிரிடுவதன் மூலம் சித்த மருத்துவத்திற்கு தேவையானவற்றை வெளிமாநிலங்களில் இருந்து வாங்காமல் நாமே வழங்கமுடியும்.
ஆட்சி அமைந்த 15 மாத காலத்திற்குள் இந்தியாவிலேயே முதன்முறையாக சித்த மருத்துவத்திற்கென ஒரு பல்கலை அமைக்க மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதற்கு குறிப்பு எழுதி திருப்பி அனுப்பிவிட்டார் ஆளுநர். திருத்தங்கள் செய்து மீண்டும் இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம்.
சித்த பல்கலை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை அண்ணாநகரில் ஆரம்பகட்ட பணிகள் நடந்துவருகிறது. மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் பரப்பில் சித்தா பல்கலை அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 100 இடங்களில் சித்த மருத்துவ நலவாழ்வு மையம் அமைக்கப்படவுள்ளது. பழநியில் சித்த மருத்துவக் கல்லூரிக்கு தேவையான 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை விரைவில் திறக்கப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகிராம மக்கள் பயன்படும் வகையில் பன்றிமலை மற்றும் ஒட்டன்சத்திரம் நகரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. இத்துடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமையவுள்ளது" என்றார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன், வேலுச்சாமி எம்.பி., பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.