மதுரை: தடை விதிக்கப்பட்ட பிறகும் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்ந்து விளையாடப்படுவதை தடுக்க விபிஎன் தொழில்நுட்பத்தை முறைப்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பிரிஃபயர் விளையாட்டுக்கு அடிமையாகி மாயமான இளம் பெண் ஒருவரை மீட்கக்கோரி அவரது தாயார் உயர் நீதிமன்ற கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர்கள் பலர் பிரிஃபயர் போல் பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தங்களின் குழந்தைகளும் அடிமையாகியிருப்பதாக நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரிஃபயர் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது தொடர்பான பொதுநல மனுவை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று விசாரணைக்கு எடுத்தது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், விபிஎன் செயலி பயன்பாட்டை முறைப்படுத்தவும், தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை விளையாடுவது எப்படி? திருட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்பது போன்ற முறையற்ற வீடியோக்களை பதிவிடுவதில் இருந்து யூடியூப் சேனலை முறைப்படுத்தவும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கான தடையை மத்திய அரசு முறையாக அமல்படுத்தவும், ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயணபிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பதிவுத்துறை சார்பில் வழக்கறிஞர் கு.சாமித்துரை வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. பிரிஃபயர் விளையாட்டில் அதை விளையாடுவோரின் மனதில் வன்முறையை விதைக்கும் அம்சங்கள் அதிகளவில் உள்ளன. பிரிஃபயர் விளையாடும் நபர் உலகில் எந்த மூலையில் இருக்கும் நபரையும் விளையாட்டில் சேர்க்க முடியும். அவருடன் பேசவும், தகவல் அனுப்பவும் முடியும். பிரிஃபயர் விளையாட்டில் துப்பாக்கி, உடை போன்றவைகளை ஆன்லைனில் வாங்குகின்றனர். இதற்காக பெற்றோரின் ஏடிஎம், கிரடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். பிரிஃபயர் விளையாடுவதை பெற்றோர் தடுக்கும்போது தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஆன்லைன் விளையாட்டுகள் மிகவும் மோசமானது. குறிப்பாக பெண் குழந்தைகளும், பெண்களும் மோசமான நபர்களின் கைகளில் சிக்கிக் கொள்ளவும் ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக அமைகிறது. சமூக விரோதிகள ஆன்லைன் விளையாட்டுகள் வழியாக சுலபமாக நுழைந்து வங்கி கணக்கு விபரங்கள், தனிப்பட்ட தகவல்களை திருடி பின்னர் பணம் கேட்டு மிரட்டவும், பாலியல் தொந்தரவுகளும் அளிக்கின்றனர்.
தடைக்கு பிறகும் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட முடிகிறது. விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (விபிஎன்) அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. விபிஎன் மென்பொருள் பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் கிடைக்கிறது. விபிஎன் வழியாக பிற நாட்டின் சர்வர்களை சுலபமாக அணுக முடியும். இந்த வசதியை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பிறகும் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், யூடியூப், கூகுள் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளனர்.