சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அந்தப் பதிவில், "நயனும், நானும் அம்மா - அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. எங்களது பிரார்த்தனைகள், முன்னோரின் ஆசிர்வாதங்கள், நன்மைகள் எல்லாம் சேர்ந்து இரு குழந்தைகள் வடிவில் எங்களுக்கு கிடைத்துள்ளது. எங்களுடைய உயிர் மற்றும் உலகத்துக்கு உங்கள் அனைவருடைய ஆசிர்வாதங்களும் தேவை" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் வாடகைத் தாய் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றினார்களா என்று ஊரக மருத்துவ இயக்குநரகம் மூலம் விளக்கம் பெறப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக இணை இயக்குநர் தலைமையிலான குழு விசாரணையை துவங்கியுள்ளது. மருத்தவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மருத்துவமனைகள் தரப்பில் விசாரணை மேற்கொண்டு, உரிய முறையில் இந்த நடைமுறை பதிவு செய்யப்பட்டதா எனவும் ஆய்வு செய்ய உள்ளது. மேலும் எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா எனவும் விசாரணை மேற்கொள்ள உள்ளது.
மேலும் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற தமிழகம் முழுவதும் பதிவு செய்பவர்களின் விவரம் மருத்துவமனைகள் மூலம் அரசுக்கு சமர்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்ட பதிவில் நயன்தாரா - விக்னேஷ்சிவன் பெயர் உள்ளதா என்பது குறித்து விசாரண நடைபெற உள்ளது. மருத்துவமனையின் விசாரணை முடிந்த பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிந்தவுடன் இணை இயக்குநர் தலைமையிலான குழு டிஎம்எஸ் இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பித்து, அதன் பின் அரசுக்கு அந்த அறிக்கை வழங்கப்படும் எனத் தெரிகிறது.