மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டமான `குட்டி காவலர்' திட்டத்தை தலைமைச் செயலகத்திலிருந்து நேற்று காணொலி மூலம் தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோரும், கோவை கொடிசியா வளாகத்திலிருந்து காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர் ஜி.எம்.சமீரான் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். 
தமிழகம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு | மாணவர்களுக்கான ‘குட்டி காவலர்’ திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்களிடம் பரப்பும் வகையில், கோவையில் ‘ குட்டி காவலர் ’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து, நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் மூலம் கற்பித்து, அவர்களை சாலை பாதுகாப்பு தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும்.

தமிழக அரசு மற்றும் கோவை உயிர் அறக்கட்டளை இணைந்து இந்த திட்டத்தை தொடங்கியுள்ளன. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழியை வாசிக்க, கோவை கொடிசியா வர்த்தக தொழிற்காட்சி மையத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 4.50 லட்சம் மணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, குட்டி காவலர் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த மாணவர் பயிற்சிக் கையேட்டையும், ஆசிரியர்களுக்கான வழிகாட்டிப் புத்தகத்தையும் முதல்வர் வெளியிட்டார்.

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அதிக அளவிலான எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்கும் இந்த உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று, அதற்கான சான்றிதழ் முதல்வரிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, உயிர் அறக்கட்டளைத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, நிர்வாக அறங்காவலர் எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT