சென்னை: திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கருணாநிதி அறக்கட்டளைக்காக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தி, அதில் கிடைக்கும் வட்டித் தொகையில் மாதம்தோறும் ஏழை, நலிந்தோருக்கு உதவித் தொகை, கடந்த 2005 முதல் 2007 வரை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 30-வது புத்தகக் காட்சியை கடந்த 2007 ஜன.10-ல் திறந்து வைத்து கருணாநிதி பேசும்போது, வைப்பு நிதியான ரூ.5 கோடியில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்தார். எனவே, மீதமுள்ள ரூ.4 கோடியில் இருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ நிதியுதவியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். கன்னியாகுமரியைச் சேர்ந்த காவலர் ஆ.ஆல்பிரட் தாஸ், கிழக்கு தாம்பரம் டி.தங்கவேலு, தேனி கு.பரமசிவம், பொன்.சுருளிநாதன், மதுரை பி.ராமச்சந்திரன், திண்டுக்கல் ஆர்.ராமன், நீலகிரிஎஸ்.விஜயகுமார், கோவை ஆர்.சீனிவாசன் ஆகியோர் நிதியைப் பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.