தமிழகம்

எண்ணெய், சீயக்காய் பயன்படுத்துவதால் குற்றால அருவிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா?

செய்திப்பிரிவு

குற்றால அருவிகளில் எண்ணெய், சீயக்காய் பயன்படுத்துவதால் குற்றாலத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா? என்பதை அறிய நிபுணர் குழு அமைக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

குற்றாலத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி வழக்கறிஞர் கிருஷ்ணசாமி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் 2014-ல் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றாலத்தில் நேரில் ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் ஆணையர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுப்படி, வழக்கறி ஞர்கள் ஆணையர்கள் டி.எஸ்.ஆர்.வெங்கடரமணா, அருண் என்ற அருணாசலம் ஆகியோர் குற்றாலத்தில் ஆய்வு நடத்தி, ‘மெயின் அருவி அருகே ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது, பொது இடங்களில் மது அருந்துகின்றனர் என்பது உள்பட பல்வேறு குறைபாடுகளை பட்டியலிட்டு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, குற்றாலத்தில் எண்ணெய், ஷாம்பு, குளியல் சோப், துணி துவைக்கும் சோப்பு, சீயக்காய், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் ஆகிய வற்றை பயன்படுத்தத் தடை விதித்தும், உள்ளூர்வாசிகளைத் தவிர சுற்றுலாப் பயணிகளுக்கு சோப்பு, ஷாம்பு விற்க தடை விதித்தும் நீதிபதிகள் 28.11.2014-ல் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி காசிமா ஜோர்புரத்தைச் சேர்ந்த எஸ்.செந்தில் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செ ய்தார்.

அதில், சுற்றுச்சூழல் சார்புடைய வல்லுனர் குழு ஆய்வு நடத்தாமல், வழக்கறிஞர்கள் ஆணையரின் அறிக்கை அடிப்படையில் உள்ளூர் வாசிகளை தவிர்த்து, சுற்றுலா பயணிகளுக்கு குற்றாலத்தில் எண்ணெய், சோப்பு, ஷாம்பு, சீயக்காய் விற்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ள்ளது. எண்ணெய் குளியல் தமிழர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புடையவது. ஆயுர்வேதம், சித்தா மருத்துவத்திலும் எண்ணெய் குளியல் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே எண்ணெய், சோப்பு, ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்தத தடை விதித்து பிறப்பித்த உத் தரவை மாற்றிமைக்க வேண்டும். இப்பொருள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா என்பதை அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த வல்லுனர் குழு அமைக்க வேண் டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உள்ளூர்வாசிகள் தவிர்த்து மற்றவர்களுக்கு எண்ணெய், சீயக்காய், சோப்பு, ஷாம்பு விற்கக்கூடாது என முந்தைய அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் குற்றாலத்தில் வசிப்பவர்களின் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், உறவினர்களும் வீடுகள், தங்கும் விடுதிகளில் குளிக்க எண்ணெய், சோப்பு கிடைக் காமல் பாதிக்கப்படுவர். அருவியில் குளிக்கும் போது எண்ணெய், சீயக்காய் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படு வதற்கு வாய்ப்பில்லை. எண் ணெய், சீயக்காய் ஆகியன இயற்கையோடு ஒன்றியவை. இதனால் முந்தைய அமர்வி்ன் உத்தரவை மாற்றி யமைக்க விரும்புகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கறிஞர் ஆணையர் வெங்கட்ரமணா வாதிடும்போது, ‘அருவியில் குளிக்கும் போது எண்ணெய் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்றார். அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப் பட்டுள்ளது. சில பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் சிரமம் உள்ளது. அந்த பரிந்துரைகளுக்கு நீதிமன்றத்தின் விளக்கம் தேவைப் படுகிறது என்றார். சீராய்வு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘ மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் விஜயலெட்சுமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், புவியியல் துறைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோரை வைத்து ஆய்வு நடத்தி முடிவெடுக்கலாம் என்றார்.

இதையடுத்து, அருவியில் குளிக்கும் போது சோப்பு, ஷாம்பு உள்பட ரசாயனம் கலந்த பொருட்கள் தவிர்த்து எண்ணெய் மற்றும் இயற்கையான சீயக்காய் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா என்பதை நிபுணர்கள் குழு மூலம் அறிவதற்கு நீதிமன்றம் விரும்புகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வு செய்யாமல் சீராய்வு மனு மீது உத்தரவிட முடியாது. இதனால் சீராய்வு மனுதாரர் தெரிவித்துள்ள 3 பேரும், நெல்லை மாவட்ட வன பாதுகாவலர், சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரும் நவ. 14ல் நேரில் ஆஜராக வேண்டும்.

இதற்கிடையே வழக்கறிஞர் ஆணையர், குற்றாலத்தில் சுற்று ச்சூழலை பாதுகாக்க மேலும் என்ன செய்யலாம் என்பது தொடர்பாக நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT