ராமநாதபுரம்: கமுதி அருகே அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அரசு மாணவர் விடுதியில் கட்டிடங்கள் சேதமடைந்து, ஜன்னல்கள் அந்தரத்தில் தொங்குவதால் மாணவர்கள் அச்சத்துடன் தங்கி வருகின்றனர். கமுதி அருகே நீராவியில் உள்ள தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக, அங்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 1987-ல் அரசு மாணவர்கள் விடுதி கட்டப்பட்டது. இந்த விடுதியில் தற்போது 110 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிடத்தின் பக்கவாட்டுச் சுவர்கள், மேற்கூரை சிமென்ட் பூச்சுகள், ஜன்னல் பகுதிகள் முற்றிலும் சேதம் அடைந்து கால்நடைகள், மனிதர்கள் உள்ளே நுழையும் அளவுக்கு பெரிய துவாரம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்களில் திரியும் கால்நடைகளும், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் அடிக்கடி விடுதிக்குள் புகுந்து மாணவர்களை அச்சுறுத்தி வருகிறது. அதனால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த விடுதி கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனின் சொந்த தொகுதியில், அவரது துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதி இவ்வளவு மோசமாக உள்ளதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து விடுதிக் காப்பாளர் ராஜ் கூறியதாவது: விடுதிக் கட்டிடம் சேதம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதுகுறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) குருசந்திரனிடம் கேட்டபோது, விடுதி சேதம் குறித்தும், விரைவில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.