தமிழக அரசின் விளையாட்டுத்துறைக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆணழகன் துறையையும் இணைக்க வலியுறுத்த வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசனின் இன்று மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். 
தமிழகம்

விளையாட்டு துறைக்கான வேலைவாய்ப்பில் ஆணழகன் துறையை இணைக்க வலியுறுத்தல்: மதுரை எம்பி-யிடம் மனு அளித்த ஆணழகன் சங்கத்தினர்

சுப.ஜனநாயக செல்வம்

மதுரை: தமிழக அரசின் வேலைவாய்ப்பில் 3 சதவீத விளையாட்டுத்துறைக்கான இட ஒதுக்கீட்டில் ஆணழகன் துறையையும் இணைக்க தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசனிடம் மதுரை ஆணழகன் சங்க நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர்.

மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் செளந்திரபாண்டியன், பொதுச்செயலாளர் கே.சிவக்குமார், பொருளாளர் பிரவீன் ஆண்ட்ரூஸ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் 80 பேர், மதுரை எம்பி சு.வெங்கடேசனை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், தமிழ்நாட்டில் ஆணழகன் துறையில் மாநில அளவிலான போட்டிகள், தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆணழகன்கள் மத்திய அரசின் ரயில்வே துறை, தபால் துறை, வருமான வரித்துறை, ராணுவ முப்படைகளின் துறையில் 100-க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதேபோல், தமிழக அரசின் வேலைவாய்ப்பில் விளையாட்டு துறைக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆணழகன் துறையையும் இணைக்க வேண்டும். அதற்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு தாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக எம்பி முன்னிலையில் ஆணழகன்கள் தங்களது உடற்பயிற்சி திறமைகளை காட்டும் வகையில் ஆணழகன் போட்டி நடத்திக் காட்டினர். இதில் சில நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் மதுரை ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாரீஸ்வரன் மற்றும் ஆணழகன் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்..

SCROLL FOR NEXT