சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சார்பில் வழங்கப்பட்டுள்ள கடிதங்கள் குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு நாளை பரிசீலனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில், அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க கோரி இபிஎஸ் பேரவைத் தலைவருக்கு கடிதம் கொடுத்துள்ளார். இதேபோல், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான், எனவே சட்டப்பேரவையில் கட்சி சார்பில் எந்த முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும், தன்னை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் இரண்டு முறை பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
இந்த கடிதங்கள் குறித்து, பேரவைத் தலைவர் அப்பாவு நாளை பரிசீலனை மேற்கொண்டு முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவையைப் பொறுத்தவரை என்ன முடிவெடுத்தாலும், அது பேரவைத் தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
அதேபோல், பேரவையில் யாருக்கு எந்த இருக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்பதும் பேரவைத் தலைவரின் முடிவுக்குட்பட்டது. அதன் அடிப்படையில், ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதங்கள் குறித்து பேரவைத் தலைவர் பரிசீலனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.