எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் 59 பெட்ரோல் பங்க்குகளில் ரூ.2,000 பெற்றுக் கொள்ளும் திட்டம் சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதனால் கடந்த 10 நாட்களாக வங்கிகள், ஏடிஎம் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக, ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும் டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல் நாளான நேற்று முன்தினம் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் பெட்ரோல் பங்க்குகளில் பணம் வழங்கப்படவில்லை.
2-வது நாளான நேற்று இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள 59 பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் பெற்றுக்கொள்ளும் நடைமுறை நேற்று மதியம் 12 மணி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஆனால், சென்னையில் உள்ள எந்த பெட்ரோல் பங்க்கும் எஸ்பிஐ கார்டுகளைப் பயன்படுத்தாததால் சென்னைவாசிகள் தங்கள் எஸ்பிஐ கார்டுகளைப் பயன்படுத்தி பணம் பெற முடியாது.
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.