ஒருநாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் இன்று திறக்கப்படும் நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு நீங்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதன்படி, முதலில் ஒருசில தினங்களுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ. 4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு அந்த உச்சவரம்பு ரூ.4 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதியது.
மேலும், ஏடிஎம்களில் ரூ.2 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்ற விதி தளர்த்தப்பட்டு ரூ.2 ஆயிரத்து 500 வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாததால் ஏடிஎம்கள் முடங்கின.
இதனிடையே, ஒரு நபரே மீண்டும் மீண்டும் வங்கியில் பணம் மாற்றுவதை தடுப்பதற்காக விரல்களில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கிடையே, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500-க்கு பதிலாக ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு மற்றும் மை பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் வங்கிகளில் கூட்டம் குறையத் தொடங்கியது.
கடந்த 11 நாட்களாக விடுமுறையின்றி செயல்பட்ட வங்கிகள் விடுமுறை தினமான நேற்று மூடப்பட்டன. இன்று வங்கிகள் திறக்கப்படும் நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதால் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு நீ்ங்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், பெரும்பாலான ஏடிஎம் மையங் களும் கடந்த 12 நாட்களாக பணம் இன்றி மூடப்பட்டுள்ளன. செயல்படும் ஒருசில ஏடிஎம் மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் அவற் றுக்குச் சில்லறை கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
500 ரூபாய் நோட்டுகள்
இதனிடையே, 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு இந்த வாரத்தில் ரிசர்வ் வங்கி அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடந்தால் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை ஓரளவுக்கு சீரடையும் என தெரிகிறது.