சென்னையில் நேற்று காலை பரவலாக மழை பெய்த நிலையில், ராஜீவ்காந்தி சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்ற வாகனங்கள். (அடுத்த படம்) வேளச்சேரி - தரமணி இணைப்புச் சாலையில் மழையில் நனைந்தபடி சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத் திறனாளி பெண். படங்கள்: பு.க.பிரவீன் 
தமிழகம்

சென்னையில் மழை: பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சென்னையில் நேற்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9.30 மணியளவில் லேசானசாரலுடன் தொடங்கிய மழை, சிறிது நேரத்திலேயே நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழையாகப் பெய்தது. குறிப்பாக கோயம்பேடு, பட்டினப்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம், கே.கே.நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி, அண்ணாசாலை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. தொடர்ந்து நண்பகல் வரை விட்டுவிட்டு லேசான சாரல் மழை பெய்தது.

இந்நிலையில், சாலைகளில் மழைநீர் தேங்கியதாலும், ஆங்காங்கே மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கிண்டி பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதர பகுதிகளில் ஏற்பட்ட நெரிசலை அவ்வப்போது போக்குவரத்து போலீஸார்சீர் செய்தனர். சென்னையில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT