வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இதனால் தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ''வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை கடந்த 2 வாரமாக, கன்னியாகுமரி- அந்தமான் இடையே நிலைகொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.
இதற்கிடையே வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பாபாநாசத்தில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது'' என்று கூறினார்.