தமிழகம்

உடுமலையில் இடிந்து விழும் நிலையில் பள்ளிக் கட்டிடம்?

எம்.நாகராஜன்

உடுமலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை அகற்றவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை சதாசிவம் வீதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் சுமார் 40 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்ற இப்பள்ளியில், தனியார் பள்ளி மோகத்தால் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து தற்போது பாதியாக குறைந்துள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பழைய பள்ளிக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அங்கு பள்ளிக் குழந்தைகள் பயன் படுத்திய பழைய பெஞ்ச் மற்றும் டேபிள்கள் குவிக்கப்பட்டுள்ளன.

இக்கட்டிடத்தின் பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து இடிந்து விழுந்துள்ளன. அதனால், சுவர் எலும்புக் கூடு போல காட்சி தருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பழைய கட்டிடம் முறையான பராமரிப்பின்றி உள் ளது. புதிய கட்டிடம் கட்டப்பட்ட பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் ஒரே வகுப்பறையிலேயே அமர வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். குழந் தைகள் விளையாட போதிய இட வசதி இல்லை. மாணவிகளுக்கான கழிவறை பழுதடைந்த கட்டிடத்தின் பின்னால் உள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது என்றனர்.

உதவி தொடக்கக் கல்வி அலு வலரிடம் கேட்டபோது, ‘இப்பள்ளி யில் ஏற்கெனவே ஆய்வு நடத்தப் பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை அகற்ற வேண் டும் என கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நக ராட்சி அதிகாரிகள் தான் கட்டிடங் களை கவனித்து வருவதால், ஆணையருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் முன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புவது வழக்கம். அதில், பள்ளி மாணவர்களின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும். மின் சாதனங்களில் மின் கசிவு இருப்பதை சரிசெய்ய வேண்டும். உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்துள்ளனவா? என்பது உட்பட பல்வேறு விஷயங்களை கவனித்து அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படும். இதே போன்றதொரு சுற்றறிக்கை இந்த ஆண்டும் வழக்கம் போலவே அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிக் குழந்தைகளை அச்சுறுத்தும் கட்டிடங்களும் இருக்கவே செய்கின்றன. இது குறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT