சென்னை: அரசு திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு நேரடியாக கிடைக்கச் செய்வதில் அஞ்சல்துறை முக்கியப் பங்காற்றி வருகிறது என தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் இரா.ரவிச்சந்திரன் கூறினார். தேசிய அஞ்சல் வாரத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், கடந்த 2021-ம் ஆண்டுக்கான அஞ்சல் சேவை விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அஞ்சல் சேவைகள் இயக்குநர் பா.ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் இரா. ரவிச்சந்திரன் சிறப்பாக பணியாற்றிய 8 ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார். மேலும், அஞ்சலக வருவாயை அதிகரித்ததற்காக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன், வர்த்தக வளர்ச்சியை அதிகரித்ததற்காக அஞ்சல் துறை தலைவர் (மெயில் மற்றும் வணிக வளர்ச்சி) ஸ்ரீதேவி, அஞ்சல் துறை நிர்வாக வளர்ச்சிக்காக தமிழ்நாடு அஞ்சல் வட்ட பொது மேலாளர் (அஞ்சலக கணக்கு) அனிதா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விருதுகளையும், உலக அஞ்சல் குழும கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளையும் ஆணையர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது:அனைத்துக் கிராமங்களிலும் பொதுமக்களிடம் சிறந்த நண்பர்களாக திகழ்பவர்கள் தபால்காரர்கள். கரோனா தொற்று பரவியசமயத்தில், அஞ்சல் ஊழியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்தனர். குறிப்பாக, பொதுமக்களுக்கு மருந்துப் பொருட்களை கொண்டு போய் சேர்த்தனர். அரசு திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கச் செய்வதில் அஞ்சல் துறை முக்கியப்பங்காற்றி வருகிறது. இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார். விழாவில் பேசிய தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் பா.செல்வக்குமார், அஞ்சல் ஊழியர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதுடன் பொதுமக்களுடன் எளிய முறையில் தொடர்பில் இருப்பவர்கள். சிறப்பான சேவை வழங்குவதில் அகில இந்திய அளவில் தமிழக அஞ்சல் வட்டம் எப்போதும் முதல் 3 இடத்துக்குள் இருந்து வருகிறது.
அஞ்சலக சேமிப்புக் கணக்கு மற்றும் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பிரிவில் தமிழக அஞ்சல் வட்டம் கடந்த 3 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது என்றார். விழாவில் அஞ்சல் துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அஞ்சல் சேவை விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பாகப் பணியாற்றிய அஞ்சல் ஊழியருக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமானவரித் துறை முதன்மை தலைமை ஆணையர் இரா.ரவிச்சந்திரன் விருது வழங்கினார். உடன் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் பா.செல்வக்குமார், அஞ்சல் துறை தலைவர் (மெயில் மற்றும் வணிக வளர்ச்சி) ஸ்ரீதேவி.