சென்னை: தொழில்நுட்பங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 25 ஆண்டுகளில் இந்தியா வல்லரசு நாடாக உருவாக வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஏ.சண்முகசுந்தரம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள ரோபோடிக்ஸ் மற்றும்செயற்கை நுண்ணறிவு நுட்பத்துக்கான சிறப்பு இருக்கையின் தொடக்கவிழா பல்கலைக்கழக வெள்ளி விழாஅரங்கில் நேற்று நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் சுதா சேஷய்யன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து இருக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ கணபதி,மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அஸ்வத் நாராயணன், பிரிட்டன் எடின்பரோ ராயல் கல்லூரிதுணைத் தலைவர் பாலா ராஜேஷ், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை டீன் தேரணிராஜன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் சாந்திமலர் ஆகியோர் விழா வில் பங்கேற்றனர்
விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
இந்தியாவிலேயே அரசு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் முதல் சிறப்பு இருக்கை இது என்பது பெருமைக்குரிய விஷயம். தொழில்நுட்பம், நமது வாழ்க்கை, புறச்சூழல் என அனைத்தையுமே மாற்றியமைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், பொறியியல், கல்வி என அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் கிராமங்கள்தோறும் கண்ணாடி இழை தடம் பதிக்கப்பட்டு இணையஇணைப்பு தரப்படுகிறது. தொழில்நுட்ப வசதிகள் நாடு முழுவதும் மேம்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் மருத்துவத் துறையில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கைநுண்ணறிவு நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வெகு சில மருத்துவமனைகளில் மட்டுமே இருக்கும் அத்தகைய நுட்பம், அனைத்து இடங்களிலும் விரிவடைய வேண்டும். அதற்கு ஏற்றவாறு நம்மை அமைத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதன் அடிப்படையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது, வரும் 2047-ல் நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு விழா வருகிறது. அதற்குள் தொழில்நுட்பத்தின் உறுதுணையுடன் இந்தியா வல்லரசு நாடாக மேம்பட வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “நாட்டிலேயே அரசுமருத்துவமனைகளில் முதன்முறையாக ரோபோடிக் அறுவை சிகிச்சைகட்டமைப்பு சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். அதன்மூலம் இதுவரை 70 பேர் பயனடைந்துள்ளனர். புதிய செயல் திட்டங்களை மேம்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது” என்றார்.