சென்னை: சிப்காட் - பிரிட்டிஷ் துணை உயர்ஆணையரகம் மற்றும் சிப்காட்- அண்ணா பல்கலைக்கழகம் இடையே, தொழில்நுட்ப உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள இலக்கான, 2030-31-ம்நிதியாண்டுக்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சிப்காட் மற்றும் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகம் இடையே தொழில்நுட்ப உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம், சூளகிரி வருங்கால நகர்திறன் பூங்காவுக்கான தொலைநோக்கு பார்வை மற்றும் முதன்மைத் திட்டம் தயாரிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், முதலீட்டு வசதிகளுக்கான வழிவகைகள் மற்றும் ஆளுமை கட்ட மைப்புகள் போன்றவற்றை வரையறுப்பதற்கு சிப்காட்டுக்கு உதவும். மேலும், வெளிநாடுகளிலுள்ள இத்தகைய பூங்காக்களின் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து, அதை சூளகிரி வருங்கால நகர்திறன் பூங்காவின் வளர்ச்சிக்கு பயன்படுத்த, பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகம் வகை செய்யும்.
அதேபோல், சிப்காட் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை தொழில்நுட்ப பங்குதாரராக நியமித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம், ஒரகடம் மருத்துவ உபகரணங்கள் பூங்காவுக்கான உட்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப ஆதரவு,மருத்துவ தொழில்நுட்பத் துறையில் உள்ள உற்பத்தியாளர் களின் திறனை மேம்படுத்துவதுடன், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தயாரிப்புகளை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் உதவும். மேலும், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில் 4,994 சதுரஅடி பரப்பளவில், ரூ.1.95 கோடி மதிப்பில், கட்டப்பட்டுள்ள திட்ட மற்றும் நிர்வாக அலுவலக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார். இப்பூங்காவில் உள்ள நிறுவனங்கள் சுமார் ரூ.1,185 கோடி முதலீடு செய்ததன் மூலம் 6,514 தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் 4,784 சதுரஅடி பரப்பில், ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திட்ட மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இப்பூங்காவில் உள்ள நிறுவனங்கள் ரூ.2,622 கோடி முதலீடு செய்து சுமார் 11,500 தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 3,045 சதுரஅடி பரப்பளவில், ரூ.1.12 கோடி மதிப்பில் தீயணைப்பு நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, சிப்காட் நிறுவனத்தின் 2021-2022-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ரூ.61.20 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம்தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறை யன்பு, தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.