சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டில் 344 மாடுகளும், 2021-ம் ஆண்டு 1,259 மாடுகளும் பிடிக்கப்பட்டன. நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 5,447 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 131 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாகப் பராமரித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு காவல் துறையின் மூலம் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.