துரை வைகோ | கோப்புப் படம் 
தமிழகம்

பாஜக அரசின் ஏஜென்டாக செயல்படுகிறார் தமிழக ஆளுநர்: துரை வைகோ குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

‘தமிழக முதல்வரின் முடிவுகளுக்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது. தமிழக ஆளுநர் பாஜக அரசின் ஏஜெண்டாக செயல்படுகிறார்,’ என மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.

சிவகாசியில் உள்ள ஒரு திரையரங்கில் வைகோ ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது. அதன்பின், துரைவைகோ அளித்த பேட்டி:

கட்சிகளைத் தாண்டி வைகோவின் தியாகங்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்வதற்காக ஆவணப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி, மாநிலங்களின் வளர்ச்சி, அடிப்படை தேவைகள் ஆகியவற்றை புறம் தள்ளிவிட்டு பாஜக அரசு மத அரசியலை நடத்துகிறது.

திருவள்ளுவர் தொடங்கி ராஜராஜ சோழன் வரை பல்வேறு பிரச்சினைகள் பாஜக அரசால் வருகிறது. தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட மிகப்பெரிய தமிழக மன்னன் ராஜராஜ சோழன்.

அவர் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ, ஜாதிக்கோ சொந்தமானவர் அல்ல. தலைவர்கள் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் சொந்தமானவர்கள்.

பொது வாழ்வில் உள்ளவர்கள் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதத்தில் பயணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் கட்சிகளை தாண்டி, நல்ல மனிதர்களை ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மதிமுக கடுமையாக உழைக்கும். ஒரு ஜனநாயக நாட்டில் வெற்றி பெற்ற கட்சி 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும்.

ஆனால், அந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டால், அந்த முயற்சி படுதோல்வியில் முடிவடையும். தற்போது மக்கள் மிகவும் விழிப்புணர்ச்சியுடன் உள்ளனர்.

தமிழக முதல்வரின் முடிவுகளுக்கு மத்திய அரசு தடைக் கல்லாக உள்ளது. தமிழக ஆளுநர் பாஜக அரசின் ஏஜெண்டாகவே செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT