தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்கள் இடிக்கப்பட்டு 8 மாதங்களாகியும் புதிய கட்டிடம் கட்டஅரசு நிதி ஒதுக்காததால் மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து பாடம்கற்று வருவதாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும்பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்றுநடைபெற்றது. ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
மரத்தடியில் பாடம்: ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த 17 வகுப்பறைகளை கொண்ட 3 கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சுமார் 8 மாதங்களாகிறது. புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு சார்பில் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை.
வகுப்பறை கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் இப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் அரசு பள்ளி வளாகத்தில் வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு போதிய இடவசதி இல்லாததால் 600 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மாணவிகளுக்கு மரத்தடியில் வைத்து வகுப்புகள் நடத்தப்படுவதால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மேலும், கழிப்பறை, போக்குவரத்து வசதி இல்லாமல் மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளதால் மாணவிகளின் நிலைமை மிகவும்மோசமாகும் சூழல் உள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே,மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கைஎடுத்து புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இல்லை: கயத்தாறு வட்டம் திருமங்கலக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் அளித்த மனு:திருமங்கலக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் உயர் நிலைப்பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியரை தவிர ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை.
ஆரம்பக் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை கொண்டே இந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும், பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில் ‘புதூரில் உள்ள தனியார் இ-சேவை மையத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இ-சேவை மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரியுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அளித்த மனு : திருச்செந்தூரில் இருந்து பழனி வழியாக பாலக்காடு வரை இயக்கப்படும் ரயில் தொடக்கத்தில் வைகுண்டம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது.
இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த ரயில் வைகுண்டம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது.
இதனால் பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் இரு மார்க்கங்களிலும் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.