தமிழகம்

பிரம்மாண்டமாக நடந்த திமுக பொதுக்குழு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நேற்று திமுக பொதுக்குழுக் கூட்டம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

* பொதுக்குழுக் கூட்டத்துக்கு வருவோரை வரவேற்கும் வகையில், மைதான வாயிலில் மேடை அமைத்து கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

* மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஸ்டாலினைப் பாராட்டுவது போன்ற வரைபடம் பொதுக்குழு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

* சிறப்பு அழைப்பாளர்கள், அழைப்பாளர்கள் உள்ளிட்ட பேட்ஜ் கொண்டு வந்திருந்தவர்களை மட்டுமே போலீஸார் உள்ளே அனுமதித்தனர்.

* பொதுக்குழுவின் மதிய உணவில் பலாக்காய் பிரியாணி, திருவையாறு அசோகா அல்வா என 19 வகையான சைவ உணவுகளும், மட்டன் பிரியாணியுடன், ஆற்காடு மக்கன் பேடா உள்ளிட்ட 12 வகை அசைவ உணவுகளும் இடம்பெற்றிருந்தன.

* காலை 9.30 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார். வழிநெடுகிலும் மேள, தாளங்கள் முழங்கின. நாட்டுப்புறக் கலைகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

* காலை 10 மணிக்கு பொதுக்குழு நடைபெற்ற மைதானத்துக்கு வந்த ஸ்டாலினை திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலர் நே.சிற்றரசு, எம்எல்ஏ மோகன் ஆகியோர் வரவேற்றனர்.

* தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்குத் தேர்வானவர்கள் அறிவிக்கப்பட்டதும், தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலர் நே.சிற்றரசு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. பொதுக்குழுக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.

* பொதுக்குழு முடிந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்கள், பெரியார் நினைவிடம், திமுக முன்னாள் பொதுச் செயலர் மறைந்த க.அன்பழகன் இல்லம், கருணாநிதியின் கோபாலபுரம், சிஐடி காலனி இல்லங்களுக்கு முதல்வர் ஸ்டாலின், புதிய நிர்வாகிகள் சென்று, மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT