ஆலக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் படுதாக்களால் மூடிவைக்கப்படடுள்ள நெல் மூட்டைகள். படம்: ஆர்.வெங்கடேஷ் 
தமிழகம்

தஞ்சாவூரில் பரவலாக மழை: நெல் கொள்முதல் செய்வதில் தொய்வு - விவசாயிகள் கவலை

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், குறுவையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் மதியம் வரை பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய ஏதுவாக மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மழைக்கு முன்பே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதால் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 17 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், நெல் கொள்முதல் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் அறுவடை செய்யப்பட்ட நெல் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பகல் நேரத்தில் வெயிலில் நெல்லை உலர்த்தினாலும், இரவு நேரத்தில் பெய்யும் மழை, பனி போன்றவற்றால் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால், நெல்லை உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது. சில கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மழைநீரால் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் நனைந்து சேதமடைந்துள்ளன. இது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும்வேளையில், நெல் கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல்லை ஈரப்பதத்தில் தளர்வு அளித்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ராயமுண்டான்பட்டி விவசாயி வெ.ஜீவக்குமார் கூறும்போது, "டெல்டா மாவட்ட விவசாயிகளின் நிலையை உணர்ந்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, நெல்லின் ஈரப்பதத்துக்கான தளர்வை மத்திய அரசு உடனடியாக அளிக்க வேண்டும்" என்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 90 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) பூதலூர் 90, திருக்காட்டுப்பள்ளி 64, அணைக்கரை 36, திருவிடைமருதூர் 19, மஞ்சளாறு 16, கல்லணை 15, தஞ்சாவூர் 15, கும்பகோணம் 12.

SCROLL FOR NEXT