தமிழகம்

வாடிக்கையாளர் பணம் செலுத்திய பிராண்ட்-க்கு பதிலாக போலி அலமாரியை அளித்த கடைக்கு அபராதம்

செய்திப்பிரிவு

வாடிக்கையாளர் பணம் செலுத்திய பிராண்ட்-க்கு பதில் போலியான வார்ட்ரோப் (அலமாரி) விநியோகம் செய்த பர்னிச்சர் கடைக்கு அபராதம் விதித்து கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை வேடப்பட்டியைச் சேர்ந்த நர்ரா கவுரி பிரசாத் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது புதிய சொகுசு வீட்டுக்குஅலமாரி வாங்குவதற்காக ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையின் ஷோரூமுக்கு கடந்த 2018 ஜூன் மாதம் சென்று பார்த்தேன். அங்கு பல்வேறு பிராண்ட், நிறங்கள், டிசைன்களில் அலமாரிகள் இருந்தன.

அதைப்பார்த்தபிறகு, குறிப்பிட்ட பிராண்ட்-ஐ தேர்வு செய்து, அதை வாங்க முடிவு செய்தேன். அந்த அலமாரியின் விலை ரூ.4.20 லட்சம் என்று தெரிவித்தனர். அதில், 80 சதவீதமான ரூ.3.36 லட்சத்தை ஜூலை மாதம் செலுத்தினேன். அக்டோபர் மாதம் எனது வீட்டுக்கு 3 அலமாரிகளை அனுப்பிவைத்தனர்.

அதைத்தொடர்ந்து எஞ்சியுள்ள தொகையையும் செலுத்தினேன். அனைத்து பணிகளும் நிறைவடைந்ததைத்தொடர்ந்து 2018 டிசம்பர் மாதம் அந்த புதிய வீட்டில் குடியேறினேன். அந்த அலமாரிகளை பயன்படுத்த தொடங்கியபிறகு அவை வளையத்தொடங்கின.

இதுதொடர்பாக புகார் தெரிவித்தும், அதை பர்னிச்சர் நிறுவனத்தினர் சரி செய்து தரவில்லை. இதையடுத்து, எனக்கு விநியோகிக்கப்பட்ட அலமாரியின் தரத்தில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட பிராண்ட் ஊழியரை தொடர்புகொண்டு ரசீதுகளை அனுப்பி விசாரித்தேன்.

அந்த நிறுவனத்தின் ஊழியர் எனக்கு விநியோகிக்கப்பட்டது, அந்த பிராண்ட் அலமாரியே இல்லை என்று தெரிவித்தார். குறிப்பிட்ட பிராண்ட் பெயரில் போலியான பொருளை விநியோகித்து பர்னிச்சர் நிறுவனத்தினர் என்னை ஏமாற்றியுள்ளனர். எனவே, பர்னிச்சர் கடைக்கு 2019 மார்ச் 23-ம்தேதி நோட்டீஸ் அனுப்பினேன்.

அதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, எனக்கு அளித்த போலி அலமாரியை அகற்றிவிட்டு, நான் கேட்ட பிராண்டின் அசல் அலமாரிகளை பொருத்தவோ அல்லது நான் செலுத்திய பணத்தை திருப்பி அளிக்கவோ உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.தங்கவேல், உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி.சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், “பர்னிச்சர் கடையின் சேவையில் குறைபாடு இருந்துள்ளது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரர் அலமாரி வாங்க செலுத்திய ரூ.4.20 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் பர்னிச்சர் கடை உரிமையாளர் திருப்பி அளிக்கவேண்டும். அதோடு, மனுதாரருக்குஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரம் அளிக்க வேண்டும்"என்று உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT