நாமக்கல் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. திடீர் விலை ஏற்றத்துக்கு பதுக்கலே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம் மற்றும் மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
உள்ளூர் சந்தையில் விற்பனை: இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் உள்ளூர்களில் கூடும் சந்தை மற்றும் உழவர் சந்தைகளில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதேபோல, விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சின்ன வெங்காயத்தின் சில்லறை விலை ஒரு கிலோ ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்த நிலையில் கடந்த இரு நாட்களாக ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழை மற்றும் பதுக்கலே திடீர் விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக நாமக்கல் வியாபாரிகள் கூறியதாவது: கடந்த ஓராண்டுக்கு முன்னர் சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. விலையேற்றம் காரணமாக சின்னவெங்காயத்தின் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தி அதிகரித்து விலை குறைந்தது.
இந்தாண்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வரை ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை ஒருபுறம் இருந்தாலும், பதுக்கல் காரணமாக செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
எனவே, பதுக்கலை தடுத்து, விலை உயர்வை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.