ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இட நெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப் பகுதியில் 2 ஏக்கரில் 50 பேருந்துகளை நிறுத்தும் வகையில் 1985-ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
இங்கு மதுரை, சென்னை, திருச்சி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை உட்பட பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், நகரப் பேருந்துகள் என தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. போதிய இட வசதி இல்லாததால் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நிற்கின்றன.
ஆண்டாள் கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில், பிளவக்கல் அணை, செண்பகத் தோப்பு உள்ளிட்ட இடங்களுக்கு தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
ஆனால் பேருந்து நிலையத்தில் பேருந்து நுழைவுக் கட்டணம், கடைகளின் வாடகை என மாதம் பல லட்சம் ரூபாய் வருவாய் வந்தாலும் கழிப்பறை, காத்திருப்பு அறை, வாகனக் காப்பகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள் ளதால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம், திருக்கல்யாணம், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் புரட்டாசி உற்சவம் உள்ளிட்ட விழாக் காலங்களில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடியாம ல் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனை, மார்க்கெட், கடை வீதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. மார்க்கெட், வணிக நிறுவனங்களுக்கு வரும் சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் பேருந்துகள் வரும் வழி ஒருவழிப் பாதையாக மாற்றப் பட்டது.
மதுரையில் இருந்து வரும் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் நிறுத்தத்தில் இருந்து நேதாஜி சாலை வழியாக பேருந்து நிலையம் வந்து, பின் திருவண்ணாமலை சாலை வழியாக ராமகிருஷ்ணாபுரம் சென்று மீண்டும் சர்ச் வழியாக ராஜபாளையம் செல்கிறது.
இதனால் நேதாஜி சாலை, திருவண்ணாமலை சாலை, ராமகிருஷ்ணாபுரம், பென்னிங்கடன் மார்க்கெட், அரசு மருத்துவமனை, சின்னக்கடை பஜார் உள்ளிட்ட முக்கிய சாலைகள் நெரிசலில் திண்டாடுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு இல்லாததால் பேருந்து நிலையம் கட்டப்படவில்லை. தற்போது திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
எனவே ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், நான்குவழிச் சாலை அருகே அடிப்படை வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.