மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு இரவில் வரும் மாரடைப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோ கிராம், ஸ்டென்டிங், பைபாஸ்சர்ஜரி உள்ளிட்ட முக்கிய அறுவைசிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இரவில் மாரடைப்பு ஏற்பட்டு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை கே.கே.நகர் சுகாதாரச் செயற்பட்டாளர் ஆனந்தராஜ் கூறியதாவது: மாரடைப்பு ஏற்பட்டு இரவில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இதய நோய் மருத்துவர்கள் பணியில் இருப்ப தில்லை.
இதனால் பொது மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள் மூலம் இதய அடைப்பை சரி செய்வதற்கு பிடிசிஏ-வுடன் ஸ்டென்டிங் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைகள் மட்டும் வழங்கப்படுகின்றன.
ஆனால், பெரிய அடைப்பு இருக்கும்பட்சத்தில் உடனடியாக ஸ்டென்டிங் சிகிச்சை உள்ளிட்ட பிற அவசர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இரவு நேரத்தில் உடனடியாகச் செய்ய முடிவதில்லை.
இதய நோய் நிபுணர்கள் காலையில் வந்த பின்னரே செய்ய முடிகிறது. அதுவும் ஸ்டென்ட் மருத்துவ சாதனத்தை மருத்துவக் காப்பீட்டு மூலம் விண்ணப்பித்துப் பெற்று அதன் பின் பொருத்தும் நிலைஉள்ளது. இவ்வாறான நடைமுறை சிக்கல்களால் இரவு நேரங்களில் உயிர் காக்கும் சிகிச்சைமேற்கொள்ள முடியாமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று செலவு செய்து கடனாளியாகும் பரிதாபம் தொடர்கிறது.
இரவு நேர மாரடைப்பு நோயாளி களுக்கு பிடிசிஏ-வுடன் ஸ்டென்டிங் உயிர்காக்கும் மருத்துவ அவசர சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டீன் ரத்தினவேலு கூறிய தாவது: சிகிச்சைக்கு வரும் அனைவருக்கும் உடனடியாக ஸ்டெண்ட் வைக்கிற சூழல் ஏற் படாது. பல நோயாளிகளுக்கு மருந்துகளைக்கொண்டே அடைப்பைக் கரைக்கிற சிகிச்சை வழங்கினாலே சரியாகிவிடும். ஸ்டெண்ட் வைக்கிற மாதிரியான நோயாளிகள் வருகை இரவில் குறைவாகவே உள்ளன.
நெருக்கடியான நிலையில் வரும் நோயாளிகளுக்கு ஆன் லைனில் 5 நிமிடங்களிலேயே முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் முன் அனுமதி பெற்று உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது.
அதற்குப் பிறகே அந்த நோயாளியிடம் காப்பீடு அட்டை, ஆதார் போன்ற ஆவணங்கள் பெறப்படுகின்றன. இரவில் இதய சிகிச்சை வழங்குவதற்கு `சிப்ட்' முறையில் மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.
மாரடைப்பு ஏற்பட்ட எந்த நோயாளியையும் 6 மணி நேரத்துக்குள் கொண்டு வந்தால் மட்டுமே உரிய சிகிச்சை வழங்க முடியும். ஆனால், நிறைய நோயாளிகள் விழிப்புணர்வு இல்லாமல் மாரடைப்பு ஏற்பட் டதே தெரியாமல் தாமதமாக வரு கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.