தமிழகம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்யப்படுமா?

செய்திப்பிரிவு

உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

விவசாயிகள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வசதியாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய நோட்டுகளை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு கூறுகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்துள்ள விவசாயிகள், பழைய ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றித் தருமாறு வங்கியில் கோரினோம்.

‘புதிய நோட்டு வரவில்லை. மத்திய கூட்டுறவு வங்கியில்தான் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர். விவசாயிகள் பணத்தை மாற்ற வசதியாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, இது நேற்று அவசர வழக்காக எடுத்து விசாரிக்கப்பட்டது. அப்போது நடந்த வாதம்:

நீதிபதி என்.கிருபாகரன்:

இத்திட்டத்தால் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். இது தற்காலிகமானது. வங்கி ஊழியர்களும் மனிதர்கள்தான். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் அவர்கள் ஓய்வின்றி பணியாற்றுகின்றனர். திரையரங்கில் பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள், இதற்காக சில மணி நேரம் காத்திருக்கக்கூடாதா?

ரிசர்வ் வங்கி தரப்பு வழக்கறிஞர்:

பணப் பரிமாற்றத்துக்கு தேவையான ரூபாய் நோட்டுகளை முழு அளவில் அச்சடிப்பதில் தொழில்நுட்ப சிரமங்கள் உள்ளன. இந்த சூழலிலும், மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு போதிய அளவு புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் ரூ.10 கோடிக்கு புதிய நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய நோட்டுகளை விநியோகிப்பது குறித்து மத்திய கூட்டுறவு வங்கிதான் முடிவு செய்ய வேண்டும்.

மத்திய கூட்டுறவு வங்கி தரப்பு வழக்கறிஞர்:

ரிசர்வ் வங்கியின் பட்டியலில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்தான் உள்ளன. இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் வராது. தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளுக்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்துதான் பணம் அனுப்பப்படுகிறது.

இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய நோட்டுகள் அனுப்பப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் காசோலை மூலம் மத்திய கூட்டுறவு வங்கியில் நேரடியாக பணம் எடுக்க முடியும்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்:

வாடிக்கையாளர்கள் மத்திய கூட்டுறவு வங்கிக்கு சென்றுதான் பணம் எடுக்க முடியும் என்றால், தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கிகள் எதற்கு?

இவ்வாறு வாதம் நடந்தது. இந்த வழக்கில் 16-ம் தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

SCROLL FOR NEXT