தமிழகம்

அரசு மருத்துவமனையில் லிப்ட் தேவை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் லிப்ட் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு மருத்துவமனைகள், ஏழை, நடுத்தர மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்திசெய்து வருகின்றன. பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வாகனநிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக இல்லை. மேலும், சரிவர பராமரிக்கப்படுவதும் இல்லை.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனையில் 4 பெரிய கட்டிடங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டிடமும் 6 தளங்களைக் கொண்டதாக உள்ளது. இங்கு தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். ஒவ்வொரு கட்டிடத்திலும் 4 லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 லிப்ட்கள் நோயாளிகள் மற்றும் உதவியாளர்களுக்கும், 2 லிப்ட்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலகஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இங்கு தினமும் ஏராளமானோர் வருவதால் 2 லிப்ட்கள் போதுமானதாக இல்லை. வயதானவர்கள், நோயாளிகள் ஆகியோர் மாடிப்படிகளில் செல்ல முடியாது. லிப்ட்டில்தான் செல்ல முடியும். இதனால் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், புற நோயாளிகள் காலை 8 முதல் 10 மணி வரைதான் மருத்துவம் பார்க்க முடியும்.இதனால், குறித்த நேரத்தில் அவர்களால் செல்ல முடியவில்லை. எனவே, லிப்ட் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும்,எஸ்கலேட்டர் வசதியும் ஏற்படுத்தினால், தங்குதடையின்றி மேல் தளங்களுக்குச் செல்ல முடியும்.

அதேபோல, மருந்து மாத்திரைகளை ‘காலை, மதியம், இரவு’ என்று அச்சிடப்பட்ட காகித கவரில் அளிக்க வேண்டும். இதனால்,அனைவரும் நேரம் மாறாமல் மருந்துகளை உட்கொள்ள முடியும்.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவனைகளிலும் இந்த வசதியைக் கொண்டுவரவேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT