சென்னை: மருத்துவ மேலாண்மை தகவல் பதிவேடு மற்றும் நோயாளிகளின் விவரங்களை அறியும் கட்டமைப்பை, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தங்களிடம் வழங்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆணைய தலைவர் சுரேஷ் சந்திர சர்மா, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மருத்துவ மேலாண்மைத் தகவல்கள் மற்றும் நோயாளிகளின் விவரங்களுக்கான இணையப்பதிவேட்டை, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டமைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்திடம் பகிர்ந்து கொள்ளுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ்அப், ட்விட்டர், மின்னஞ்சல், இணையவழியில் மருத்துவக் கல்லூரிகளுக்கு செய்திகள் அனுப்பியும், வெகு சில மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, மருத்துவப் பதிவேடு விவரங்களை வழங்கியுள்ளன.
பெரும்பாலான கல்லூரிகள் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை. இன்னும் சில கல்லூரிகளில் அத்தகைய பதிவேடு கட்டமைப்பே இல்லாத நிலை உள்ளது. எனவே, மருத்துவ மேலாண்மைப் பதிவேடு கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிகள், வரும் 10-ம் தேதிக்குள் அவற்றை ஏற்படுத்த வேண்டும். அத்தகைய கட்டமைப்பு உள்ளகல்லூரிகள், அந்த விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்திடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.