தமிழகம்

குற்ற வழக்குகளில் கைதானவர்களிடம் இருந்து பெறப்படும் புலன் விசாரணை தகவல்களை பொதுவெளியில் வெளியிட கூடாது: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: குற்ற வழக்குகளில் கைதானவர்களிடம் இருந்து பெறப்படும் புலன் விசாரணை தகவல்களைபொதுவெளியில் வெளியிடக்கூடாது என போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூரை தலைமையிடமாகக் கொண்ட ஐஎப்எஸ் என்ற இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீசஸ் நிதி நிறுவனமும், சென்னை கிண்டியில் செயல்படும் எல்என்எஸ் என்ற நிதி நிறுவனமும் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.10 ஆயிரம் கோடி வரை வசூலித்து ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சரவணக்குமார், மோகன்பாபு, லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனம், குப்புராஜ் உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முக்கிய குற்றவாளிகள் தலைமறைவான நிலையில், அவர்கள்வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாத வகையில், விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் கைதான குப்புராஜ் என்பவரின் மனைவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது கணவர் குறித்து ஊடகங்களில் முன்னுக்குப் பின் முரணாக செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே புலன் விசாரணை விவரங்களை போலீஸார் ஊடகங்களில் வெளியிடக்கூடாது என உத்தரவிட வேண்டும். இது என் கணவரின் தனிப்பட்ட உரிமையை பாதிப்பதாக உள்ளது’ என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்துள்ள உத்தரவு: மனுதாரரின் கணவர் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய வழிவகுத்துள்ளார். அதனால் அவர்இந்த வழக்கில் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ரூ.10 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளது என்பதால் இந்த வழக்கின் விசாரணையில் வெளிப்படைத்தன்மை தேவைஎன்பதால் கைது மற்றும் பறிமுதல்தொடர்பாக ஊடகங்களுக்கு செய்தி அறிக்கை தரப்படுகிறது. இதன்மூலம் மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதேநேரம் புலன் விசாரணை குறித்த, ரகசியம் காக்கப்பட வேண்டிய தகவல்களை விளம்பரத்துக்காக வெளியிட்டு நீதி நிர்வாகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. புலன் விசாரணையில் கிடைக்கும் ரகசிய தகவல்களே அந்த வழக்கை வெற்றியடைய செய்யும். எனவே குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களிடம் புலன் விசாரணையின்போது பெறப்படும் தகவல், ஒப்புதல் வாக்குமூலம் போன்ற விவரங்களை போலீஸார் பொதுவெளியில் வெளியிடக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

SCROLL FOR NEXT