விழுப்புரம்: எந்தப் போராட்டத்திற்கும் நான் தயார்; நீங்கள் தயாரா? என பாமக நிறுவனர் ராமதாஸ் நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினார்.
திண்டிவனத்தில் பாமக தொழிற்சங்க பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராம தாஸ் பேசியது: எங்கு கூப்பிட்டாலும் வந்து போராட, அறிக்கை விட, சட்டமன் றத்தில் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல, தயாராக உள்ளோம். என்னை போராட்டக்காரர் என்று சொன்னால் நான் மகிழ்ச்சி அடைவேன். போராட்டம் எனது வாழ்க்கையாக அமைந்திருக்கிறது. தொழிலாளர்களுக்காக போராட தயாராக இருக்கிறேன். எந்தப் போராட்டத்திற்கும் தயார். நீங்கள் தயாரா? எந்த பிரச்சினையாக இருந்தாலும், அறிக்கை அன்றைக்கே வரும். கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலே ஆரம்பித்தது தான் தொழிற்சங்கம்.
நாம் ஆட்சியில் இருந்தால் தொழிலாளர்கள் கோரிக்கைகளை உடனே நிறை வேற்றி விடலாம். நாம் ஆட்சியில் இல்லை. அன்புமணி தலைமையில் தொழிலாளர்களுக்கான அரசை உருவாக்க நாளும் முயற்சிக்க வேண்டும். வலிமையான தொழிற் சங்க மாக இருக்க வேண்டும். சில களைகள் முளைத்திருக்கின்றன. அந்த களைகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்த பெயரை வைத்து இன்னொரு தொழிற்சங்கம் எனயாராவது சொன்னால் அல்லதுஆரம்பிக்கப்பட்டது தெரிந்தால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப் படுவார்கள். வேறு ஏதாவது ஒரு பெயரை வைத்துக் கொள்ளுங்கள்.
என் படத்தையோ, அன்புமணி படத்தையோ போடுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. இந்த சர்ச்சைக்கு இடையில் 7 பேர் பாமகவில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். எனவே இனி எங்கள் இருவரது படத்தை வைப்பதோ, பெயரை பயன்படுத்துவதோ அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை. பாட்டாளி தொழிற்சங்கம் என்ற பெயரையும் அவர்கள் உபயோகிக்கக் கூடாது என்றார்.