திருநெல்வேலி: மழைக் காலங்களில் திசையன் விளை அருகே குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் மழை நீர் ஒழுகும் அவலம் நீடிக்கிறது. புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை மதிப்பீடு தயாரித்த பிறகும், நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வரும் 16-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பருவமழைக்கு முன்ன தாக பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே குட்டம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த பல ஆண்டுகளாக மழைக் காலங்களில் ஒழுகிக் கொண்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள கடற்கரை கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயில்கிறார்கள். ஆனால், இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. பள்ளிக் கட்டிடத்தின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது. சேதமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் 8 வகுப்பறை கட்டிடம், வேதியியல் ஆய்வகம் கட்டித் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. கடந்த 19.07.2021-ம் தேதி பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1.98 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில், நிதி ஒதுக்காததால் பள்ளிக் கட்டிடம் கட்டப்படாமல் இருக்கிறது.
தற்போது போதிய இடவசதி இல்லாமல் மழைநீர் ஒழுகும் ஓட்டுக் கட்டிடத்தில் அமர்ந்து மாணவ, மாணவிகள் கல்வி பயில வேண்டிய சூழ்நிலை உள்ளது. வரும் பருவமழைக் காலத்திலும் ஒழுகும் கட்டிடத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய துர்பாக்கியத்துக்கு மாணவ, மாணவியர் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறியதாவது: கடந்த 1960-ம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டது. கட்டிடங்கள் மிகவும் பழமையாக உள்ளன. இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்து இதுவரை நிதி ஒதுக்கவில்லை. விரைவில் நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பள்ளி மாணவ, மாணவியர் கூறும்போது, “மழைக் காலங்களில் பாடங்களை சரிவர கவனிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக புதிய கட்டிடத்தை கட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்” என்று தெரிவித்தனர். இதுகுறித்து, பொதுப்பணித்து றை வட்டாரங்கள் கூறும்போது, “நிதி ஒதுக்க மதீப்பீடு தயார் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப் பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் நிதி ஒதுக்கியதும் பணிகள் தொடங்கும்” என்று தெரிவித்தனர்.