உயிரிழந்த செல்வமுருகன் | கோப்புப் படம் 
தமிழகம்

திருவாரூர் அருகே உணவு சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உள்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதி: ஒருவர் பலி

சி.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: திருவாரூர் அருகே உணவு சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உட்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருவாசல், மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (29) ,.இவரது மனைவி மாரியம்மாள் ( 26). மாரியம்மாள் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் இவருக்கு ஐந்தாவது மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி விக்னேஷ் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. அதில் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இதில், தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், கருவேப்பிலை சாதம், லெமன் சாதம் ஆகியவற்றுடன் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து, ஐந்து பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கர்ப்பிணி பெண்ணின் தந்தை அடியக்கமங்கலம் அரசு மருத்துவமனையிலும், நான்கு வயது குழந்தை ஒன்று திருவாரூர் தனியார் மருத்துவமனையிலும், அனுமதிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண் மாரியம்மாள் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலங்குடியை சேர்ந்த செல்வமுருகன் (24) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருவாரூர் வட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT