சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் எப்போது தொடங்கும் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 3-வது வாரம், அதாவது வரும் 17-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெறலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் ஏற்கெனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டபடி, ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகியவை முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட உள்ளது. இதுதவிர, பல்வேறு சட்ட மசோதாக்களும், நிதி தொடர்பான மசோதாக்களும் நிறைவேற்றப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.