திருமுருகன்பூண்டி குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்டதால், மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12 பேரை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்றிரவு சந்தித்து ஆறுதல் கூறினார்.
தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றிருந்தால் 3 பேரின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
சிகிச்சையில் உள்ள 4 மாணவர்களுக்கு மட்டும் இன்னும் காய்ச்சல் குறையாத நிலையில், தனியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லமுறையில் சிகிச்சை வழங்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
எஞ்சிய சிறுவர்கள் நல்லமுறையில் வீட்டுக்கு செல்லக்கூடிய நிலையில் உள்ளனர். உயிரிழந்த 3 சிறுவர்களின் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் தான், உணவில் ஏற்பட்ட கோளாறா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பது தெரியவரும்.
உணவில் தான் பிரச்சினை என அனுமானத்தின் மூலம் முதல் கட்டமாக தெரியவருகிறது. முதல்வர், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனை அனுப்பி உள்ளார். அவர் விசாரிக்க வர உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.