தமிழகம்

தீபாவளி நெருங்குவதால் கைத்தறி பட்டு சேலைகளுக்கு முன்கூட்டியே தள்ளுபடி அறிவிக்க வேண்டும்: விற்பனையை அதிகரிக்க அரசுக்கு நெசவாளர்கள் யோசனை

கோ.கார்த்திக்

காஞ்சிபுரம்: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டு கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுச்சேலை மற்றும் ஆடை விற்பனைக்கான தள்ளுபடி அறிவிப்புகளை முன்கூட்டியே அறிவிக்கவேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கைத்தறி நெசவுத்தொழில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. பொருளாதார நிலை உணர்ந்து விலை உயர்ந்த பட்டு சேலைகளை வாங்க தற்போது மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதேநேரம் ஒரு சில தனியார் நிறுவனங்கள் விலை குறைவான பட்டுச்சேலைகள் மற்றும் வேஷ்டிகளை உற்பத்தி செய்து விற்கின்றன.

கூட்டுறவு சங்கங்களில் உள்ள தேக்க நிலை மற்றும் நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு நெசவாளர்களுக்கு கூலி உயர்வை முறையாக அமல்படுத்தாமல் உள்ளதாக தெரிகிறது. இதனால், பண்டிகை காலங்களில் கைத்தறி பட்டுச்சேலைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை, சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் அடுத்தடுத்து பண்டிகைக் காலங்கள் வருவதாலும் கைத்தறி பட்டுச் சேலைகள் மற்றும் ஆடைகளுக்கான தள்ளுபடி அறிவிப்புகளை முன்கூட்டியே வெளியிட்டு, தனியாருக்கு இணையாக விற்பனையை அதிகரிக்க கைத்தறி மற்றும் துணிநூல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பட்டு கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த நெசவாளர்கள் கூறியதாவது: பண்டிகைக் காலங்களில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை தாமதமாகவே தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடுகிறது. இதனால், கூட்டுறவு சங்கங்களில் விற்பனை பாதிக்கிறது. மேலும், 20 சதவீதம் தள்ளுபடி என அறிவித்தாலும் சங்கங்கள் சார்பில் ரூ.200 மட்டுமே தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. அதனால், பட்டுச்சேலையின் முழு விலையிலும் 20 சதவீதம் தள்ளுபடி என்பதை செயல்படுத்த வேண்டும். இதன்மூலம், கைத்தறி ரகங்களின் விற்பனை அதிகரிக்கும். எனவே, நெசவாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு நடப்பாண்டு உரிய அறிவிப்புகளை, தமிழக அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு கூறினர். இதுகுறித்து, துறை அதிகாரிகள் கூறும்போது, “நெசவாளர்களின் கோரிக்கை தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT