எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஒரு மாதத்துக்கும் மேலாக தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாக்கடை கால்வாய் இல்லாததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது.
இந்நிலையில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் ஒரு மாதத்துக்கும் மேல் மழைநீர் தேங்கி இருப்பதால் பாசி பிடித்து பச்சை நிறமாக காட்சியளிக்கிறது.
சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, துர்நாற்றமும் வீசுகிறது. அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் பலர் பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர்.
கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, மழை நீரை அகற்றி, கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.