கோவை: சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் என கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று (அக்.06) கோவை வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கலாச்சார அடையாளங்கள் மறைக்கப்பட்டால் எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம். இந்து மதத்தின் அடையாளங்களை மறைக்க சிலர் முற்படுகின்றனர். அப்படி மறைக்க முற்பட்டால் அது சரியாக இருக்காது.
தமிழகத்தை பொருத்தவரை கலாச்சாரத்தையே மாற்றக்கூடிய சூழ்நிலை வந்துவிடுகிறது. தமிழகத்தில்தான் அதிக கோயில்கள் உள்ளன. இருக்கும் அடையாளங்கள் அப்படியே இருக்கட்டும். அடையாளங்களை நீங்கள் மாற்ற வேண்டாம். அடையாளங்களை மாற்றுவதால் எதுவும் கிடைக்கப்போவதி்ல்லை. இதனால் அநாவசிய மோதல்கள்தான் வரும். அது கருத்து மோதல்களாகி, நேரடி மோதல்களாக வந்து விடுகிறது. எனவே, அவரவர்களின் கருத்தை மதிக்கக் கற்றுக்கொள்வோம்.
வன்முறை எங்கும் இருக்கக்கூடாது. வன்முறை இல்லாத அமைதியான சூழ்நிலை தான் இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் புதுச்சேரியில் அமைதியாக நடந்துள்ளது. எவ்வித பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமே ஏன் பதற்றம் வருகிறது எனத் தெரியவில்லை . தமிழகத்தைச் சேர்ந்த சிலர் இன்னும் பரந்துபட்ட எண்ணத்தோடு இருக்க வேண்டும். ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற ஒரு மதம் இல்லை என கமல்ஹாசன் கூறுகிறார். மத நம்பிக்கை இல்லை என்னும்போது அவர் ஏன் அதைப்பற்றி பேசுகிறார்.
பெண்களுக்கான உடை குறித்து பேசும்போது சேலை நல்ல மாடர்ன் உடை என்றேன். ஆடைகளை குறைப்பது மட்டும் அறிவாற்றல் இல்லை. அறிவை வளர்த்துக் கொள்வதே அறிவாற்றல். மேற்கத்திய முறையில் நாம் செல்லக்கூடாது. நான் எப்போதுமே அதை எதிர்க்கிறேன். பெண்கள் ஆடையை குறைவாகவும், கவர்ச்சியாகவும் அணிவதை குறைக்க வேண்டும்.
என் தந்தையை நான் இரண்டு ஆண்டுகள் பராமரித்தேன். தமிழ்மொழியை கேட்க வேண்டும் என்பதற்காக அவர் தமிழகத்துக்கு வந்துவிட்டார்.
புதுச்சேரி மாநில மின் ஊழியர்கள், தங்களின் போராட்டத்தை திரும்பப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தனியார்மயமாக்கல் என்றதும், மின்துறையை முழுவதுமாக கொடுத்துவிடுவதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால், அப்படி எதுவும் இல்லை. இதனால் மக்களுக்கு வேண்டிய அளவுக்கு மின்கட்டணம் குறைக்கப்படும்.
திருப்பூரில் உணவு சரியில்லாததால் 3 மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வை நம்மால் ஒப்புக் கொள்ள முடியாது. இதுகுறித்து உடனடியாக தீர விசாரிக்க வேண்டும். மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற உணவு பரிசோதனைக்கு பின்புதான் கொடுக்கப்பட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்