மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜா செல்வம், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்தார். அதில், பாண்டியன் ரயிலில் 3 முன்பதிவு இல்லாத பெட்டிகள், பெண்களுக்கான தனிப் பெட்டி உட்பட 24 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. தற் போது பெட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் இடம் கிடைக்காமல் பயணிகள் சிரமப்படுகின்றனர் என கூறப் பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற கிளையின் முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் பதில் மனுத் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
பாண்டியன் விரைவு ரயிலில் தற்போது எல்எச்பி எனப்படும் நவீன, பாதுகாப்பு வசதிகள் கொண்ட 2 முன்பதிவு இல்லாத பெட்டி கள் இணைக்கப்பட்டுள் ளன. இப்பெட்டிகள் ஒவ்வொன் றிலும் 100 பேர் வரை பயணம் செய்ய முடியும். எல்எச்பி பெட்டிகளின் நீளம் 24 மீட்டர். இது ஏற்கெனவே பயன்படுத்திய பெட்டியைவிட 1.7 மீட்டர் அதிகம். இதனால் ஒரு ரயிலில் 22 பெட்டிகளை மட்டுமே இணைக்க முடியும். ரயில்வே நடைமேடையும் 22 பெட்டிகளுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இதனால் பாண்டியன் விரைவு ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை 24-ல் இருந்து 22 ஆக குறைக்கப்பட்டது.
கூடுதல் பெட்டிகளை இணைக் கும் கோரிக்கையை ஏற்க முடியாது. கூடுதல் பெட்டிகளை இணைத்தால் ரயிலை நடைமேடைக்கு வெளியே நிறுத்த வேண்டியது வரும். இதனால் பயணிகளுக்கு சிரமம், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என கூறப்பட்டிருந்தது.
பதில் அளிக்க உத்தரவு
“பெண்கள், மாற்றுத்திறனாளி களுக்கு ரயிலில் தனிப்பெட்டி இணைக்க வேண்டும் என ரயில்வே சட்டத்தில் கூறப்பட்டுள்ளபோது, அதை அமல்படுத்த மறுப்பது ஏன்? தடையாக இருக்கும் தொழில்நுட்ப காரணங்களை தெரிவிக்காமல், கூடுதல் பெட்டிகள் இணைப்பது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டு பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.