தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பரப்பு - கடந்த ஆண்டைவிட ஒரு லட்சம் ஏக்கர் அதிகரிப்பு

கி.கணேஷ்

சென்னை: தமிழகத்தில் நெல் சாகுபடியைப் பொறுத்தவரை, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பரப்பு கடந்த ஆண்டைவிட ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேல் அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் முன்னதாகவே தண்ணீர் திறப்பு, போதிய மழை உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குறுவை, சம்பா சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது தேவையான அளவு பருவமழை பெய்து, அனைத்து நீர் நிலைகளிலும் போதிய அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. இது சம்பா சாகுபடிக்கு உகந்தது என்பதால், சாகுபடி தீவிரமடைந்துள்ளது.

நடப்பாண்டு சம்பா மற்றும் பிசானம் பருவத்தில் நெல் சாகுபடி இலக்கு 34.3 லட்சம் ஏக்கராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் தற்போதுவரை 5.30 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.03 லட்சம் ஏக்கர் அதிகமாகும். மேலும், கடைமடைப் பகுதிகளில் நேரடி நெல் விதைப்பும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சம்பா பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி மற்றும் வழக்கமான நடவுக்காக 12,152 ஏக்கரில் நாற்றுகள் பயிரிடப்பட்டுள்ளன. மேலும், 2.61 லட்சம் ஏக்கரில் நேரடி நெல்விதைப்பு முறையில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்களை இருப்பு வைத்து, தேவைக்கு ஏற்ப விநியோகிக்குமாறு வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, நடவுக்குத் தேவையான டிராக்டர், பவர் டில்லர், விதைக்கும் கருவி, நாற்று நடும் கருவிகளை உரிய நேரத்தில் வழங்கவும் வேளாண் பொறியியல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர்வளத் துறையினர் உதவியுடன், பாசன வாய்க்கால்களை முறையாகப் பராமரித்து, கடைமடை வரை தண்ணீர் கிடைக்க ஏதுவாக, முறையான நீர்பாசனத்தை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு சம்பா பருவத்துக்கு 9,212 டன் விதை நெல் விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 4,608 டன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிக அளவில் சன்ன ரக அரிசியை விரும்புவதால், அவற்றை சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதற்கான விதை நெல்லும் 9,198 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்கள் தவிர, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, சேலம், தேனி, ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சம்பா நடவுக்குத் தேவையான விதைகள் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கடைமடைப் பகுதிகளில் உள்ள பாசன ஏரிகள், பண்ணைக் குட்டைகளில் நீரை சேமித்து வைத்து, தேவையானபோது பாசனத்துக்குப் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஒருபோக சாகுபடி நிலங்களில் ஆரம்பம் முதலே முறையான மற்றும் சிக்கனமான நீர்ப்பாசன முறைகளைப் பின்பற்றி இரண்டாம் போகம் பயிரிடுவதை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சம்பா பயிரை முழுவீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர்.

பயிர்க் காப்பீடு செய்வதற்கு மாவட்டங்கள் வாரியாக காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் நடப்பாண்டில் 1.26 கோடி டன் உணவு தானிய உற்பத்தியை அடைய முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT