சென்னை: மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட 13 தமிழர்கள் விமானம் மூலமாக நேற்று சென்னை வந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
தாய்லாந்து நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறையில் நல்ல வேலை வாங்கித்தருவதாகக்கூறி ஆன்லைனில் வந்த விளம்பரத்தைப் பார்த்து இளைஞர்கள் பலர், தமிழகத்தில் உள்ள இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து தாய்லாந்துக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்களைக் கட்டாயப்படுத்தி மியான்மருக்கு அனுப்பி வைப்பதாகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் மத்திய, மாநில அரசுகளுக்கு பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். மியான்மரில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் குடும்பத்தினர் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில் மியான்மரில் சிக்கியுள்ள 50 தமிழக இளைஞர்களை மீட்கும்படி பிரதமருக்கு முதல்வர் கடிதம்மூலம் வலியுறுத்தியிருந்தார். அதன்படி, மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக முதற்கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த தென்காசி விக்னேஷ், புதுக்கோட்டை அப்துல்லா, கோவை குமார், வெஸ்லி, வேலூர் அகமது, சச்சின், ஊட்டி சிவசங்கர்,பொள்ளாச்சி சவுந்தர், அரியலூர் செல்வி, கன்னியாகுமரி பிரசாந்த், ஜெனிகாஸ், கரூர் மணிக்குமார், திருச்சி செபாஸ்டின் ஆகிய 13 பேரும் மீட்கப்பட்டு, நேற்று அவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு, தனித்தனி வாகனங்களில், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வேலைக்காக பல்வேறு ஏஜெண்டுகள் மூலம் இளைஞர்கள் பலர் தாய்லாந்து அழைத்துசெல்லப்பட்டு அங்கிருந்து அருகில் உள்ள மியான்மர் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கூறப்பட்ட வேலையைத் தவிர்த்து மற்ற வேலைகளைத் தந்துள்ளனர். அவர்கள் செய்ய மறுத்துள்ளனர். அங்கு சிக்கித் தவித்த நபர்கள் குறித்த செய்தியை தமிழக முதல்வர் அறிந்ததும் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினார். அவர்கள் அங்கிருந்து தற்போது தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களை தாய்லாந்துக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்டுகள் குறித்த தகவல் கிடைக்கவில்லை. வேலைக்காக வெளிநாடு செல்வோர் தமிழக அரசிடம் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். தற்போது மீட்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்து முதல்வரின் கவனத்துக்குகொண்டு சென்று அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிகள் செய்து கொடுக்கப்படும்.
பிரதமர், உள்துறை அமைச்சருக்கு நன்றி
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மியான்மரில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களை மீட்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இணை அமைச்சர் முரளிதரனுக்கு நன்றி. மியான்மரில் தமிழர்கள் சிக்கியிருப்பதை அறிந்ததும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மற்றவர்களை மீட்கவும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என அதில் தெரிவித்துள்ளார்.