தமிழகம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போதுதான் அதிக அளவு மழை கிடைக்கிறது. வழக்கமாக அக்டோபர் 20-ம் தேதி வாக்கில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி தொடங்கியுள்ளது. அதனால் கடந்த இரு நாட்களாக தமிழக கடலோர பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை விட்டுவிட்டு பெய்த மழையால், சென்னையில் பள்ளி செல்லும் மாணவர்கள், தங்கள் பள்ளிகளுக்கு நேரத்தோடு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாயினர். பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.

சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (புதன்கிழமை) காலை மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும்.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடைவெளி விட்டு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

நேற்று காலை 8 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 8 செ.மீ. மழையும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும் ஏற்காடு, பெனுகொண்டபுரம், தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ., கேளம் பாக்கம், பையூர் ஆகிய பகுதி களில் தலா 2 செ.மீ., சென்னை, மாமல்லபுரம், கல்பாக்கம், புழல், செங்குன்றம், வேலூர், திருப்பத் தூர், மயிலம், கோத்தகிரி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புயல் எச்சரிக்கை கூண்டு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வரும் நிலையில், புதுச்சேரி, பாம்பன் போன்ற கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்ற வாய்ப் புள்ளதா என, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அடுத்த 12 மணி நேரத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். அப்போது புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்ற வாய்ப்புள்ளது” என்றனர்.

சென்னையில் 71 செ.மீ. மழை

சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த ஆண்டு மே 16 முதல், நவம்பர் 1-ம் தேதி வரை சென்னையில் 71 செ.மீ. மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையின் ஆண்டு சராசரி மழைப் பொழிவு 154 செ.மீ. ஆக உள்ளது. இதில் சுமார் 45 சதவீதத்துக்கு மேல் தென்மேற்கு பருவ மழையிலேயே சென்னைக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT