செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், நிறைவு பெறும் நிலையில் உள்ள புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கட்டுமான பணிகளை, தமிழக காவல்துறை டிஜிபி.சைலேந்திர பாபு நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கடந்த2019-ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பல்வேறு துறைசார்ந்த பணிகளை மேற்கொள்வ தற்காக, அனைத்து துறை அலுவலகங்களை ஒருங்கிணைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இறுதிக்கட்ட நிலையில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கட்டுமான பணிகளை, தமிழக காவல்துறை டிஜிபி. சைலேந்திர பாபு நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பொருளாதார குற்றப் பிரிவு, சைபர் க்ரைம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் ஒதுக்கீடு குறித்தும், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போதுகாஞ்சிபுரம் வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, டிஐஜி.சத்யபிரியா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர், படாளம் மற்றும் மதுராந்தகம் காவல் நிலையத்துக்கு சென்றடிஜிபி, வழக்குகள் மற்றும் புகார்கள் தொடர்பான ஆவணங்கள்முறையாக பராமரிக்கப்படுகின் றனவா என ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலையங்களில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்து போலீஸாரிடம் கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த டிஜிபி, தமிழகம் முழுவதும் விரைவில் 10 ஆயிரம் காவலர்கள் மற்றும் காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் பொறியியல் படித்த ஆயிரம் உதவி ஆய்வாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.