பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடபழனி முருகன் கோயில் உண்டியலில் நவம்பர் மாதம் செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் சராசரியை விட ரூ.23 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் நிதி ஆதாரம் அதிகம் உள்ள முக்கிய கோயில்களில் மாதா மாதம் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெறும். இந்நிலையில், வடபழனி முருகன் கோயிலில் நவம்பர் மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்தப் பணியின் போது ரூ.53 லட்சம் வருவாய் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரி தகவல்
இது தொடர்பாக அறநிலையத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வடபழனி முருகன் கோயில் உண்டியல் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி மாலை 4 மணியளவில் நிறைவுற்றது. இந்த மாதத்தில் ரூ.53 லட்சம் உண்டியல் மூலம் வருவாய் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பழைய ரூ.500 நோட்டுகள் 3 ஆயிரம் எண்ணிக்கை யிலும், பழைய ரூ.1,000 நோட்டுகள் 2 ஆயிரம் எண்ணிக்கையிலும் உண்டியலிலிருந்து எடுக்கப் பட்டன. வழக்கமாக வடபழனி முருகன் கோயிலில் மாதந்தோறும் உண்டியல் மூலம் சராசரியாக ரூ.30 லட்சம் வருவாய் வரும். மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமாக வரும் வருவாயை விட கூடுதலாக ரூ.23 லட்சம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.