சென்னை: சென்னையில் நீர்வழித் தடங்களில் ஆகாயத்தாமரை போன்ற மிதக்கும் கழிவுகளை முறையாக அகற்றாததால் இன்றுவரை கொசுத் தொல்லை ஒழிந்தபாடில்லை. அதனால் கொசு உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் ஆகாயத்தாமரை செடிகளை புனே மாநகராட்சியின் உயிரி நொதி தொழில்நுட்பம் மூலம் அழிக்கும் முறையைப் பின்பற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பராமரிப்பில் 30 கால்வாய்கள் உள்ளன. மேலும் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன.
மொத்தம் 228 கிமீ நீளம் கொண்ட இந்த நீர்வழித் தடங்களில் மிதக்கும் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகள் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக மட்டுமே அகற்றப்படுகின்றன. மற்ற காலங்களில் ஆகாயத் தாமரை செடிகள் புதர் போன்று வளர்ந்து கிடக்கின்றன. மாநகரப் பகுதியில் கொசுக்கள் அதிகரிக்க இவை முக்கிய காரணமாக இருக்கின்றன. இவற்றை காலத்தோடு அகற்றாமல் விட்டுவிட்டு, வளர்ந்த கொசுக்களை அழிக்க புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை இயக்கும் செலவு, மருந்து செலவு, டீசல் செலவு, ஊழியர் சம்பளம் ஆகியவற்றுக்காக மட்டுமே மாதம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு மேல் செலவாகிறது.
இந்நிலையில், கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில், கொசுக்களை ஒழிக்க புதிய தொழில்நுட்பங்கள் குறித்த தேடல் ஏதும் இல்லாமல், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நடப்பு நிதியாண்டில் வாகனங்களில் பொருத்தப்பட்ட 30 புகை பரப்பும் இயந்திரங்கள், கையில் எடுத்துச் செல்லும் 100 புகை பரப்பும் இயந்திரங்கள் வாங்கப்படும் என அறிவித்துள்ளார். இவை பயன்பாட்டுக்கு வரும்போது மாநகராட்சிக்கு மேலும் கூடுதலாக மாதம் ரூ.50 லட்சம் செலவாக வாய்ப்புள்ளது. கொசு ஒழிப்பில் தொடக்க நிலையிலேயே ஒழிப்பதுதான் சிறந்தது. புகை பரப்பி அழிப்பதைக் கடைசி வாய்ப்பாகவே பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.
உயிரி நொதி தொழில்நுட்பம்: ஆனால், ரூ.2 கோடியை விட குறைவாகச் செலவிட்டாலே, 228 கிமீ நீள நீர்வழித் தடங்களில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றி, ஆண்டு முழுவதும் மிதக்கும் கழிவுகள் இல்லாமல் பராமரிக்க முடியும். இதைச் செய்தாலே மாநகரப் பகுதியில் பெருமளவு கொசுத் தொல்லை குறையும். இதனிடையே கூவம் ஆற்றில் கழிவுநீர் விடுவது தொடர்பான வழக்கு ஒன்றில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு வழங்கிய தீர்ப்பில், புனே மாநகராட்சியில் ஆகாயத்தாமரை செடிகளை அழிக்கப் பின்பற்றப்படும் உயிரி நொதி (Bio-Enzyme) என்ற நவீன தொழில்நுட்பத்தைத் தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக நீர்வழித் தடங்களில் ஆகாயத் தாமரை செடிகளுக்கு இடையில் வளரும் கொசுப்புழுக்களை அழிக்க, எண்ணெய் தெளிக்கப்படும். இது நீருக்குள் ஆக்சிஜன் செல்வதைத் தடுத்து, கொசுப்புழு மட்டுமல்லாது இதர உயிரினங்களையும் அழித்துவிடும்.
இப்படிதான் அனுபவம் இன்றி எண்ணெய்யைத் தெளித்து, கொசுப் புழுக்களை இயற்கையாக உண்டு வாழும் டிப்லோனிகஸ் இண்டிகஸ் (Dipllonychus Indicus) என்ற உயிரினத்தையே மாநகராட்சி நிர்வாகம், மாநகர நீர்நிலைகளிலிருந்து முற்றாக அழித்துவிட்டது. ஆனால், புனே மாநகராட்சி பயன்படுத்தும் உயிரி நொதி ஆகாயத்தாமரை செடிகளை மட்டுமே அழிக்கவல்லது. நீரில் வாழும் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இதுகுறித்து மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) சங்கல் லால் குமாவத் கூறும்போது, “நல்ல ஆலோசனை இது. இதைத் தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.