புதுச்சேரி: சர்க்கிள் டீ பாண்டிச்சேரிக்கு புதிய வாடகை ஒப்பந்தம் போடாமல் ரூ. 13.5 கோடி வருமான இழப்பு ஏற்படுத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க புதுச்சேரி அரசுக்கு மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுவை சட்டப்பேரவைக்கும் ஆளுநர் மாளிகைக்கும் அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அழகிய பிரெஞ்சு கட்டடம் உள்ளது. 4 ஆயிரத்து 200 சதுர மீட்டர் அளவு கொண்ட இந்த கட்டிடத்தில் பிரெஞ்சு ஆட்சி காலத்திலிருந்து "சர்க்கிள் டீ பாண்டிச்சேரி" என்ற பெயரில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. 1954-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் நாளடைவில் மாதம் ரூ.3,238 என வாடகை உயர்த்தப்பட்டது. 2014ம் ஆண்டு வரை ரூ.13.50 கோடி வாடகை நிலுவைத் தொகை உள்ளது. இதுபற்றி தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ரகுபதி தகவல் பெற்றுள்ளார். அதில் 3 மாதங்களுக்குள் இத்தொகையை பொதுப்பணித்துறை வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் மத்திய தணிக்கை குழுவுக்கு அவர் புகார் மனு அளித்ததன் பேரில் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் புதுச்சேரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
"புதுச்சேரியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சர்க்கிள் டீ பாண்டிச்சேரிக்கு புதிய வாடகை ஒப்பந்தம் போடவில்லை. வாடகை நிலுவைத்தொகை ரூ. 13.5 கோடியை வசூலிக்க நோட்டீஸ் அனுப்பி 8 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற புகார் மீது ஒரு மாதத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது 3 மாத காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்" என்று லஞ்ச ஒழிப்பு ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.