இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் திபெத் எல்லைப் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரும், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த மருத்துவரும் தமிழில் பேசும் வீடியோவை அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா காண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டத்தில் திபெத் எல்லைப் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் இந்திய ராணுவத்தின் மதராஸ் ரெஜிமென்ட் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரருடன் அருணாச்சலப் பிரதேசத்தை மருத்துவர் ஒருவர் சரளமாக தமிழில் பேசும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா காண்டு.
அந்த ட்விட்டர் பதிவில், "டாக்டர் லாம் டோர்ஜி தமிழ்நாட்டில் மருத்துவம் பயின்றார். மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர் ஒருவருடன், அவர் சரளமாக தமிழில் பேசி ஆச்சரியப்படுத்தினார். இவர்கள் தவாங்கில் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள இடத்தில் சந்தித்தனர். உண்மையான தேசிய ஒருமைப்பாட்டுக்கு என்ன ஓர் உதாரணம்! நமது மொழிகளின் பன்முகத்தன்மை குறித்து பெருமை கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.