தூத்துக்குடியில், 7 வயது பள்ளி மாணவி 16 நிமிடங்களில் 369 ஆசனங்கள் செய்து சாதனை படைத்தார். கோவில்பட்டி பாலமுருகன்- கிருஷ்ணவேணி தம்பதியின் மகள் சக்திபிரபா(7). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே யோகா பயின்று வருகிறார்.
மாணவி சக்திபிரபாவின் சாதனை முயற்சி நிகழ்ச்சி, தூத்துக்குடி எஸ்.டி.ஆர்.மெட்ரிக் பள்ளி, சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளி முதல்வர் டயானா சிவக்குமார் தலைமை வகித்தார். கோவில்பட்டி டெம்பிள் சிட்டி பட்டயத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
அரிமா சங்க மாவட்ட தலைவர் கிங்ஸ்டன், மாணவியின் சாதனை முயற்சியை தொடங்கி வைத்தார். மாணவி சக்திபிரபா, சூரிய நமஸ்கார ஆசனத்தில் தொடங்கி, மகாமுத்திரா, பத்ராசனம், நடராஜ் ஆசனம், ஆஞ்சநேயா ஆசனம் என 369 ஆசனங்களை, 16 நிமிடங்களில் செய்து வியக்க வைத்தார்.
சக்திபிரபா கூறும்போது, ‘யோகா பயிற்சியாளர் சுரேஷ்குமாரிடம் பயிற்சி பெற்றேன். 2 வருடங்களாக தொடர்ந்து பயிற்சி எடுத்துவருகிறேன். என்னால் குறைந்தது 450 ஆசனங்களை தொடர்ந்து செய்ய முடியும்’ என்றார். மாணவிக்கு, சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், பாபாசாய் ராஜாராம், சிவதமிழவன் ஆகியோர் பரிசு வழங்கினர்.